(உரிமை 10 : குரல் 20 - 20/01/2006 ) உணர்வு வார இதழில்...

 

ஹஜ் : மினாவில் நெரிசலைத் தவிர்க்கவும் உயிர்ப்பலியை தடுக்கவும் என்ன வழி?

புனித ஹஜ் கடமையின் போது மினாவில் உள்ள ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் அகபா, ஜம்ரத்துல் உஸ்தா ஆகிய மூன்று இடங்களில் சைத்தானுக்குக் கல்லெறியும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சுமார் 25 லட்சம் மக்கள் வருடந்தோறும் கலந்து கொள்கின்றனர். அப்போது ஏற்படும் நெரிசலில் சிக்கி ஆண்டுதோறும் சில பேராவது பலியாகி வருகின்றனர்.

இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்து சுமார் 400 பேர் இறந்திருப்பார்கள் என்றும் 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் இந்தியர்களும் அடக்கம்.

இவ்வளவு பெரிய இழப்பு ஏற்படுவதற்கு மனிதத் தவறே காரணம். கல்லெறியச் செல்வதற்கு ஒரு வழியை அமைத்து, வெளியேறுவதற்கு வேறொரு வழியை அமைத்திருந்தால் இந்த நெரிசலும் ஏற்படாது. உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இந்த வசதியை சவுதி அரசு இதுவரை ஏன் ஏற்படுத்தித் தரவில்லை என்று தெரியவில்லை.

25 லட்சம் மக்கள் வந்திருக்கும் போது அவர்களை சவுதி காவல் துறையும், ராணுவமும் தக்க பாதுகப்பு தந்து, வரிசையாக செல்ல வைத்திருக்க வேண்டும்.

நாடு வாரியாக ஹாஜிகளை பிரித்து, ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு அந்த நேரத்தில் அந்தந்த நாட்டினர் இந்த கிரியை மேற்கொள்ளுமாறு செய்திருக்கலாம். அவ்வாறு செய்தால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் கூடுவதால் ஏற்படும் நெரிசலையும், அதனால் ஏற்படும் உயிரிழப்ûபயும் தவிர்க்கலாம். இனியாவது சவூதி அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

இப்படி அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியம் ஒரு புறமிருக்க, ஹஜ் செல்பவர்களுக்கு போதிய வழிகாட்டல் இல்லாததும் இத்தகைய இழப்புக்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. அதிகாலைப் பொழுதிற்கு பிறகு தான் கல் எறிய வேண்டும் என்று பெரும்பாலோர் விளங்கி வைத்திருப்பதால் ஒரே நாளில், ஒரே சமயத்தில் எல்லோரும் மினாவுக்குச் செல்லும் பாலத்தில் நெருக்கியடித்துக் கொண்டு செல்கிறார்கள். அதற்கு முந்தைய நாள் இரவில் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் கல் எறியலாம் என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்க - அந்த அறிவுறுத்தலை சம்பந்தப்பட்டவர்கள் புறக்கணிப்பது ஏனோ? உயிரிழப்பு ஏற்படுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உபதேசத்தை புறக்கணிப்பதும் மிக முக்கிய காரணமாகும்.

நெரிசலில் சிக்கி இறப்பவர்கள் மற்றும் காயமடைபவர்கள் பெரும்பாலும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகளாகவே இருக்கின்றனர். ஷைத்தானின் மீது கல்லெறியும் நிகழ்ச்சி - ஒரு அடையாள நிகழ்ச்சி தான். இயலாத சூழ்நிலை ஏற்படும் போது தூரத்தில் இருந்து ஒரு சிறு கல்லை எடுத்துப் போட்டு, கடமையை நிறைவேற்றி முடித்து விடலாம். அதற்கும் இயலாவிட்டால் இறைவன் அதற்காக குற்றம் பிடிக்க மாட்டான்.

எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் இறைவன் சோதிப்பதில்லை என்ற குர்ஆன் வசனத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாம் மிகவும் எளிய மார்க்கம். மனிதர்களுக்கு அது கஷ்டத்தைத் தரவில்லை. இலகுவையே விரும்புகிறது.

நின்று தொழுக முடிந்தால் நின்று தொழலாம். அதற்கு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழலாம். அதற்கும் இயலாவிட்டால் படுத்துக் கொண்டே தொழலாம். அதுபோல 'உளு'ச் செய்ய முடிந்தால் 'உளு'ச் செய்து தொழலாம். முடியாவிட்டால் தயம்மம் செய்து கொள்ளலாம். அதுபோல நோன்பு வைக்க சக்தி உள்ளவர்களுக்குத் தான் இஸ்லாம் நோன்பை கடமையாக்குகிறது. முடியாவிட்டால் நோன்பு வைக்க வேண்டியதில்லை. பரிகாரம் செய்தால் போதும்.

ஜகாத் என்பது கட்டாயக் கடமை தான். ஆனால், இந்தக் கடமை ஏழைகளுக்கு இல்லையே! ஹஜ் கடமையும் அது போலத் தான். யாருக்கு ஹஜ் செல்வதற்கு வசதியும், உடல் ஆரோக்கியமும் இருக்கிறதோ அவருக்குத்தான் ஹஜ் கடமையாகிறது. இது இல்லாதவர்களுக்கு ஹஜ் கடமையல்ல. இதன் மூலம் இயலுபவர்களுக்குத் தான் இஸ்லாம் கடமையாக்குகிறது, இயலாதவர்களுக்கு அது கடமையில்லை என்பதை எவரும் விளங்கலாம்.

ஹஜ்ஜின்போது ஹஜ்ருல் அஸ்வத் என்ற (கருப்பு) கல்லுக்கு முத்தமிடுவது நபிவழி. 25 லட்சம் பேரும் இப்படி முத்தமிட முடியுமா? முடியாது. அதனால் தொலைவில் இருந்து கொண்டே முத்தமிடுவது போல் சைகை செய்தால் போதும் என்கிறது இஸ்லாம். இஸ்லாத்தின் இந்த எளிய நடைமுறையை விளங்கிக் கொள்ளாததால் தான் ஷைத்தானுக்கு கல்லெறியப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு, முண்டியடித்துக் கொண்டு போய் உயிரை விடுகிறார்கள். இது மாதிரியான உயிர்ப்பலி வரும் ஆண்டில் அறவே நடக்கக் கூடாது. அதற்கு சவுதி அரசு தகுந்த ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். ஹாஜிகளும் சரியான விளக்கத் தைப் பெற்று, இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி நடந்து தங்களின் இன்னுயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாண்டு ஹஜ் பயணத்தின்போது உயிரிழந்தவர்களின் மறுமைப் பேறுக்கு நாம் அனைவரும் துஆச் செய்வோம்.

http://tntj.net/mag/un20060120_10.20.asp

- அபூ ஆயிஷா